மெக்சிகோவில் 1985 மற்றும் 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கங்களால் கொல்லப்பட்டவர்களின் நினைவு நாளான நேற்று 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஒருவர் உயிரிழந்ததுடன், பெருமளவு கட்டங்கள் சேதமடைந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், பெருமளவு நகர வாசிகள் பாதுகாப்பாக நகரத்தை விட்டு வெளியேறினர்.
நிலநடுக்கத்தின் போது பசிபிக் துறைமுகமான மன்சானிலோவில் ஒரு கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒருவர் கொல்லப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மெக்சிகோவின் குறைந்த மக்கள்தொகை கொண்ட மேற்கு மாநிலமான மைச்சோக்கனில் உள்ள பல மருத்துவமனைகளும் நிலநடுக்கத்தால் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவமனை ஒன்றில் கண்ணாடி விழுந்ததில் ஒருவர் காயமடைந்ததாக அரசு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு நேரப்படி திங்கட்கிழமை மதியம் 1 மணியளவில் (1800 GMT) கொலிமா மாநிலம் - மைக்கோகன் எல்லைக்கு அருகில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS) தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தை அடுத்து மெக்சிகோவின் கடற்கரைப் பகுதிகளுக்கு அமெரிக்க பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்தது. கடல் மட்டத்திலிருந்து 1 முதல் 3 மீட்டர் வரை அலைகள் எழக்கூடும் என எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
மெக்சிகோவில் கடந்த 1985-ஆம் ஆண்டு செப்டம்பர் 19 ஆம் திகதி ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இதேபோன்று 2017 செப்டம்பர் 19 ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 350 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இந்த நிலநடுக்கங்களில் கொல்லப்பட்டவர்களின் நினைவு நாளான நேற்று மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் மெக்சிகோவை உலுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.